யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்திற்கு விஜயம் செய்த, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில், சென்ற ஆளுநர், அப்பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுடன், வலி வடக்கில் பாதுகாப்பு படைகளின் வசமுள்ள தனியார் காணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
காங்கேசன்துறை பகுதியில், கடற்படையினர் வசமுள்ள நகுலேஸ்வரம் புனித பூமிக்கு சொந்தமான 42 ஏக்கர் காணி உட்பட, பாதுகாப்பு படைகளின் வசமுள்ள பொது மக்களின் காணிகள் விடுவிப்பு தொடர்பிலும் ஆராயப்பட்டது.
அத்துடன், இந்த விஜயத்தின் போது, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், பலாலி வடக்கு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மற்றும் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி ஆகியவற்றுக்கும் விஜயம் செய்தார்.
இதன் போது, பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் குறித்து, பாடசாலை அதிபர்களிடம் கேட்டறிந்து கொண்ட ஆளுநர், மாணவர்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.
இந்த விஜயத்தின் போது, வலி வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.(சி)