வடக்கு மாகாண கல்வி, கலாச்சார, பண்பாட்டு, விளையாட்டுத்துறை, மற்றும் இளைஞர் விவகார அமைச்சிலிருந்து கல்வியை பிரித்து தனியான அமைச்சாக மாற்ற வேண்டும் என மத்திய அமைச்சிடமும் மாகாண ஆளுநரிடமும் கோரிக்கை முன் வைத்திருப்பதாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் சரா-புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் கல்விப் புலத்தின் செயற்பாட்டை இலகு படுத்துவதற்கும் மேன்மைப் படுத்துவதற்குமாக இந்த கோரிக்கையினை வலியுறுத்தியுள்ளதாகவும். இதற்காக மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் ஆகியோர் தமது கோரிக்கைக்கு சம்மதம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.