லிபியாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

லிபியாவில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிய நிலையில், அங்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

மோதலின்போது அகதிகள் தடுப்பு முகாமில் தாக்குதல் நடத்தப்பட்டு, 53 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கும் ஐ.நா பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், லிபியா தலைநகர் திரிபோலியின் தஜூரா பகுதியில் அகதிகள் முகாம்கள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 53 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை வன்மையாகக் கண்டிக்கிறது.

மேலும், மோதலில் ஈடுபட்டுள்ள அனைத்து குழுவினரும் உடனடியாக பதற்றத்தைத் தணித்து போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் சபை வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச்சமரில் சுமார் ஆயிரம் பேர் உயிரிழந்ததாக ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவங்களில் 5 ஆயிரம் பேர் காயமடைந்ததாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

மோதல் காரணமாக ஒரு இலட்சத்துக்கு மேலானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தவித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. (நி)

Previous articleஆட்பதிவு திணைக்களம் நாளை இயங்கும்!
Next articleகல்முனையில் முதியவர் தூக்கிலிட்டு தற்கொலை!