அமெரிக்காவின் எதிர்ப்பினை மீறி ரஸ்யாவிடம் எஸ்-400 ரக ஏவுகணை தொகு பாகங்களை கொள்வனவு செய்வதற்கு துருக்கி முடிவெடுத்துள்ளது.
ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி கொள்வனவு செய்தால், அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்போம் என அமெரிக்கா பகிரங்கமாக எச்சரித்திருந்தது.
ஆனால் அமெரிக்காவின் நிர்ப்பந்தத்துக்கு துருக்கி அடி பணியாது, தனது ராணுவ தளவாட கொள்முதல் என்பது இறையாண்மையையொட்டிய விடயம் என துருக்கி திட்டவட்டமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தொடக்கம் ரஷ்யா, தனது எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கிக்கு விநியோகிக்க தொடங்கியது.
நேற்று தொடர்ந்து 2-வது நாளாக, ரஷியாவின் எஸ்-400 ஏவுகணை தொகுதி பாகங்களை துருக்கி பெற்றுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக துருக்கி ராணுவ அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ‘முர்டெட் விமானப்படை தளத்துக்கு ரஷ்யாவின் 4-வது சரக்கு விமானம் வந்து சேர்ந்துள்ளது’ என பதவிட்டிருந்தது.
துருக்கியின் இந்த நடவடிக்கையால அமெரிக்காவுக்கும், துருக்கிக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. (நி)








