யாழ்ப்பாணம் – அச்சுவேலி நகரப்பகுதியில் அமைந்துள்ள தேநீர் கடை ஒன்று, இன்று அதிகாலை பரவிய தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த தேநீர் கடை உரிமையாளர் வழமைபோன்று இன்று அதிகாலை 5:00 மணிக்கு கடையைத் திறந்து தேநீர் வைப்பதற்காக மண்ணெண்ணை அடுப்பினைப் பற்ற வைத்துள்ளார்.
இதன்போது ஏற்பட்ட தீ, அருகில் இருந்த பொருட்களில் பற்றியதில் கடை முற்றாக எரித்து நாசமாகியுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்துக்கு சென்ற இராணுவத்தினர் மற்றும் அச்சுவேலி பொலிஸார் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ் மாநகர சபையின் தீயணைப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்ட போதும், அவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வதற்குள், இராணுவத்தினர் மற்றும் அச்சுவேலி பொலிஸாரின் முயற்சியினால் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் முயற்சியினை பாராட்டிய பிரதேச மக்கள், தீயணைப்பு பிரிவினர் தாமதமாக வந்ததாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்த தீப்பரவல் தொடர்பிலான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (நி)