கறுப்பு ஜீலை நாளில் மேற்கொள்ளப்பட்ட, கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணத்தில் இன்று மாலை அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் ஏற்பாட்டில், அக்கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவேந்தல் நடாத்தப்பட்டது.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் அரசியல் தலைவரும் வட மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சுவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், செயலாளர் நாயகம் சட்டத்தரணி என்.சிறிகாந்தா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது, கடந்த 1983 ஆம் ஆண்டு கறுப்பு இதே நாளில், வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராட்ட முன்னேடிகளான, தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 53 அரசியல் கைதிகள் மற்றும் இனக்கலவர வாரத்தில் உயிர்நீத்த பொது மக்களை நினைவுகூர்ந்து, சுடரேற்றி, மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.