முஸ்லிம் சமூகத்தை, தமது அரசாங்கமே அக்கறையுடன் பாதுகாத்து வந்ததாக, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவினருடன் கலந்துரையாடலை நடத்திய எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து ஆராய்ந்துள்ளார்.
திருகோணமலை – மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் சிலர், எதிர்கட்சித் தலைவரை நேற்று மாலை கொழும்பிலுள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
முஸ்லிம் மக்கள், 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவை தோற்கடிப்பதற்கு எடுத்த தீர்மானம், முழுமையான பிழையாகும் எனவும், முஸ்லிம் தலைவர்களான முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூன் மற்றும் ரவூப் ஹக்கீம் உள்ளிட்டவர்கள் எடுத்த மிகப்பெரிய பிழையான தீர்மானமாக அவற்றைக் கருத்துவதாகவும், மூதூர் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, முஸ்லிம் சமூகத்தினருக்கு தமது அரசாங்கமே பாதுகாப்பு வழங்கி வந்ததாகவும், எதிர்காலத்திலும் அதனை செய்ய தயாராகி இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை பாதுகாப்பு செய்வதற்காக அமைக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு, நேற்று கொழும்பில் நடைபெற்றது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையை ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு முதலீடு செய்வதற்காக வழங்குவதற்கு, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் முயற்சித்து வரும் நிலையில், அதற்கெதிராக மஹிந்த அணியினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்கட்சித் தலைவரை சந்தித்த தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தற்போதைய நிலைமை தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, பாராளுமன்றத்திலும் அதேபோல வெளியிடங்களிலும் தற்போதைய அரசாங்கத்தின் தனியார் மயப்படுத்தும் திட்டங்களுக்கு கடுமையான எதிர்ப்பை தாம் வெளியிட்டு வருவதை நினைவுப்படுத்தினார். (சி)