முப்படையினர், புலனாய்வுப் பிரிவு உட்பட அனைத்து பாதுகாப்பு பிரிவினரும் 24 மணி நேர அர்ப்பணிப்பு காரணமாக, ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை தடுக்க முடிந்தது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டேகொட தெரிவித்துள்ளார்.

இன்று, கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

‘ஏப்ரல் தாக்குதலுக்குப் பின்னர், முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், எமது அனைத்துப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், 24 மணி நேரப் பணிகளை அர்ப்பணிப்பு செய்தபடியினால்தான், தீவிரவாதிகளால் நடத்தப்படவிருந்த இரண்டாவது தாக்குதலை தடுக்க முடிந்தது.

இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதையே நாங்கள் செய்து வருகின்றோம், எமது இராணுவத்தினரை மறந்து போகும் காலமும் ஏற்பட்டது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதலுக்குப் பின்னர், இராணுவத்தினர் இருக்கின்றனர் என்கிற உணர்வு அனைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது.

அதேவேளை, 30 வருட கால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மற்றும் அங்கவீனர்களாக மாற்றப்பட்டிருக்கும் இராணுவச் சிப்பாய்களுக்கு, தொடர்ச்சியாக உதவிகளையும் வீட்டுத் திட்டங்களையும் வழங்குகின்ற பணிகளை முன்னெடுப்பது குறித்து, கடந்த மாதம் 22 ஆம் திகதி , ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட எமது படையினருக்கான அத்தனை உதவிகளையும் நாங்கள் தொடர்ச்சியாக வழங்குவோம், என குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இணைந்து கொண்டனர். (சி)

Previous articleஇன்று அமைச்சரவை கூடுகின்றது!
Next articleஇம்முறை நல்லூருக்கு சோதனையின் பின்பே பக்தர்களுக்கு அனுமதி!