பயங்கரவதா குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தினை பார்வையிடுவதற்காக காலி மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மக்களுடன் இணைந்து காலி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர், ஜேர்மன் நாட்டு வானவில் நிறுவனத்தின் தலைவர் மார்ட்டின் ஹென்றிக் உள்ளிட்ட குழுவினர் இன்று வருகைதந்திருந்தனர்.
சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான உதவிகளை ஜேர்மன் நாட்டு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முன்னெடுக்கவுள்ளதாகவும் அதற்கு தேவையான தகவல்களை பெறும் பொருட்டு தாம் மட்டக்களப்பிற்கு வருகை தந்துள்ளதாகவும் வத்தேகம சமிந்த தேரர் இதன்போது தெரிவித்தார்.
இன வாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்று பட்டு இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் செயற்பட வேண்டுமெனவும், உலகின் எந்த பகுதிகளிலும் இவ்வாறான அனர்த்தம் ஏற்படாதிருக்க தாம் இறைவனை பிராத்தனை செய்வதாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வத்தேகம சமிந்த தேரர் மேலும் தெரவித்தார்.
இதன்போது குண்டுவெடிப்பினால் சேதமுற்ற சீயோன் தேவாலயத்தினையும் இக் குழுவினர் பார்வையிட்டதுடன் இதில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களின் குறைபாடுகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொண்டனர்.(ம)








