வாக்காளர் பட்டியலில் பெயர்களைப் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள், நாடுபூராகவும் முன்னெடுக்கப்பட்ட போதிலும், மலையகத்தில் அது முறையாக முன்னெடுக்கப்படவில்லை என, பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பதுளை மாவட்டத்திலுள்ள பண்டாரவளை நாயபெத்த தோட்டம் சூரியபுரத்திற்கான பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது நாட்டில் வாக்காளர் பதிவிற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு கிராம சேவகர்கள் மூலம் விண்ணப்படிவங்கள் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டாலும், உரிய முறையில் பதிவுகள் இடம்பெறவில்லை எனக்குறிப்பிட்டுள்ள வடிவேல் சுரேஸ், இது ஒரு திட்டமிட்ட செயலா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த செயற்பாட்டினால் எதிர்காலத்தில் மலையகத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர், எனவே இம்முறை உள்ளூராட்சி சபைகளுக்கு உள்வாங்கப்பட்டவர்கள் தங்கள் தொகுதிகளில் கிராம சேவகருடன் இணைந்து வாக்காளர்கள் பதிவிற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.(சி)












