மத்திய தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளபோதிலும், மலையக தபால் சேவைகள் வழமைபோன்று இடம்பெற்றுவருகிறது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தபால் சேவை ஊழியர்கள் நேற்று 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ள போதிலும், குறித்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் மலையக தபால் சேவைகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.

மலையக தபால் சேவைகள் வழமை போன்று இடம்பெற்றுவருகிறது.

வெளி பிரதேசங்களிலிருந்து வரும் கடிதங்கள் குறைந்து காணப்பட்ட போதிலும், பிரதேச ரீதியாக கடித பரிமாற்றங்கள் ஏனைய நாட்கள் போன்றே இன்றும், இடம்பெறுவதை காணக்கூடியதாக இருந்தது.

சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து, மத்திய தபால் நிலையம் மாத்திரம் 48 மணித்தியால அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் சேவைகள் ஊழியர்கள் சங்கம் நேற்று அறிவித்திருந்தது.

குறித்த போராட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் தொடர் போராட்டத்தில் தபால் சேவை சங்கம் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறவுள்ளதால், அவர்களுக்குரிய தேசிய அடையாள அட்டைகள், பரீட்சை அனுமதி பத்தரங்கள் என்பன தபால் மூலமே பரீட்சாத்திகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இந்நிலையில், தபால் சேவை சங்கம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டால் பரீட்ச்சாத்திகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். (நி)      

Previous articleஆப்கானிஸ்தானில் மோதல்:76 பேர் பலி!
Next articleபத்தனை-கிறேக்கிலி தோட்ட நடைபாதை மக்களிடம் கையளிப்பு (படங்கள் இணைப்பு)