ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய காரியாலயத்தில்; ஆரம்பகாலம் முதல் இயங்கிவந்த மலேரியா தடை இயக்கப்பிரிவானது திட்டமிட்ட முறையில் பிறிதொரு சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்மாற்றமானது இவ்வருடத்தின் ஆரம்பகாலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
இவ்விடயம் தொடர்பில் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரியிடம் நாம் கேட்டபோது கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளரின் கோரிக்கை கடிதத்திற்கு அமையவே தான் இப்பிரிவை விடுவித்ததாக கூறினார்.
மேலும் இவ்விடுவிப்பு தற்காலிகமானதே என குறிப்பிட்ட அவர் கால எல்லையை குறிப்பிட முடியாது எனவும் மாற்றப்பட்ட பிரிவிற்கு பதிலாக பிறிதொரு பிரிவை ஆலையடிவேம்பிற்கு அவர் வழங்குவதாக தமக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
ஆனாலும் அவ்வாறான எந்தவொரு பிரிவும் இதுவரையில் ஆலையடிவேம்பிற்கு வழங்கப்படவில்லை எனவும் தெரிய வருகின்றது.
இதேவேளை குறித்த பிரிவை மாற்றுவதற்காக கடந்த காலத்தில் பல முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் முயற்சியால் அச்செயற்பாடு தடுக்கப்பட்டது.
ஆனாலும் தற்போது பாராளுமன்ற உறுப்பினருக்கும் தெரியப்படுத்தாமல் புதிதாக ஆலையடிவேம்பு சுகாதார பணிமனையினை பொற்றுப்பேற்ற வைத்திய அதிகாரி குறித்த பிரிவை விடுவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் கடந்த பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பொது அமைப்புக்களால் கேள்வி எழுப்பப்பட்டபோது நடமாடும் சேவையின் நிமித்தம் அப்பிரிவு கல்முனை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் எழுத்து மூலமான அறிக்கையினை சம்மந்தப்பட்டவர்களிடம் கோருமாறு பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இது இவ்வாறிருக்க மலேரியா தடை இயக்கப்பிரிவானது ஆலையடிவேம்பிற்கு அருகில் உள்ள அக்கரைப்பற்று சுகாதார வைத்திய காரியாலயத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.