அவுஸ்ரேலியாவில் தங்கியுள்ள அகதிகளின் நலன் தொடர்பில், அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்த பரிந்துரைகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
அகதிகளாக வந்து பல்வேறு விசா பிரிவுகளின் கீழ் அவுஸ்ரேலியாவில் தற்காலிகமாக வாழ்ந்துவருபவர்களுக்கான அரச உதவிகள் கடந்த வருடம் மே மாதம் முதல் பெருமளவில் குறைக்கப்பட்டது. ‘வதிவிட உரிமைக்கான உரிய பதிலுமின்றி எதிர்காலம் குறித்த காத்திரமான பதிலும் இல்லாமல் ஏற்கனவே மன உளைச்சலை எதிர்நோக்கியிருக்கும் இந்த அகதிகளுக்கு வாழ்வாதார உதவியையும் நிறுத்துவதென்பது கொடுமையானது” என அவுஸ்ரேலிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியிருந்தது.
அத்தோடு, ‘அகதிகள் என்ற அங்கீகாரத்திற்கும், வதிவிட உரிமைக்கான நீதிமன்ற பதில்களுக்கும் காத்திருக்கும் காலப்பகுதியில் தற்காலிக விசாவில் உள்ளவர்களுக்கான நிதியுதவிகளை நிறுத்தக்கூடாது” என்ற யோசனையை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்திருந்தது.
எனினும் குறித்த யோசனையை அவுஸ்ரேலிய உள்நாட்டலுவல்கள் அமைச்சு நிராகரித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அந்நாட்டு அரசாங்கம், குறிப்பிட்ட விசா வகைகளின் கீழ் உள்ளவர்கள் அவுஸ்ரேலியாவில் பணிபுரிந்து தங்களையும் தங்களது குடும்பத்தினரையும் காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளது.
அகதிகளின் தனித்தனியான வழக்குகளை பரிசீலித்ததன் அடிப்படையில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடாகவே இவ்விடயம் காணப்படுகின்றது. எனவே அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு மதிப்பளிப்பதற்கு தவறுகின்றவர்கள் அவுஸ்ரேலியாவைவிட்டு வெளியேறவேண்டும் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (மு)








