தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் நீதிமன்றில் சமர்பித்த ஆவணங்கள் உண்மையா என ஆராயுமாறும், அவை போலியானவையாயின் தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை ஏன் எடுக்கக்கூடாது எனவும் நீதிமன்றத்தால் கோரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கில், மணிவண்ணனால் மன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் உண்மையானவையா, என்பதை கண்டறிய பதிவாளர் நாயகத்திடம் இருந்து பிரதிகளைப்பெற்று, சம்ர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டால் அவற்றை தயாரிக்க உதவியவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்று கேள்வி எழுப்பியுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் வி.மணிவண்ணன், சபை எல்லைக்குள் வசிக்கவில்லை என்றும் அவரது உறுப்புரிமை செல்லுபடியற்றது என்றும் அறிவிக்கக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததது.
இதையடுத்து, மணிவண்ணனின் சபை உறுப்புரிமைக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்ந்து நடந்து வந்தநிலையில் தற்போது இறுதி நிலையை அடைந்துள்ளது.
தீர்ப்புக்கான காரணத்துக்காக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன்போது, மாவட்டத்தில் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டமை உள்ளிட்ட ஆவணங்களை ஆணைக்குழுவிடம் இருந்து பெறுவதற்கும், காணி கொள்வனவு செய்தமைக்கான சான்றான இறுதித் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படும் விடயம் மற்றும் இரண்டு ஆண்டுகளாக வாடகை அடிப்படையில் குடியிருப்பதான நொத்தாரிசின் ஆவணங்கள் தொடர்பில் உறுதியின் மூலப் பிரதியை பதிவாளர் நாயகத்திடம் கோரி மூலப் பிரதியை பெறுவதுடன், சட்டத்தரணியும் மூலப் பிரதியைச் சமர்ப்பிப்பதற்கு சம்மதம் கோரப்பட்டது.
வாடகை ஒப்பந்தமாகச் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தில் நொத்தாரிசின் ஒப்பம் உள்ளபோதும் பதிவாளர் நாயகத்திடம் பதிவு செய்த இலக்கத்துடன் கூடிய இறப்பர் முத்திரை பொறிக்கப்படவில்லை.
அந்த வாடகை ஒப்பந்தம் பதிவாளர் செயலகத்தின் பதிவுக்காக அனுப்பட்டுப் பகிரப்பட்டதா? என பரீட்சிப்பதற்கு பதிவாளர் நாயகத்திடம் அதை அனுப்பி உறுதி செய்யும்,சட்டத்தரணி தன்னிடம் உள்ள ஆவணத்தின் மூலப் பிரதியைச் சமர்ப்பிக்கவும் கோருவதற்குத் தீர்மானிப்பதால் அது தொடர்பாக இரு தரப்பின் கருத்துக்களும் கோரப்பட்டன.
வழக்களர் தரப்புச் சட்டத்தரணியான, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சமந்திரன் அதற்கு தனது ஒப்புதலை தெரிவித்தார்.
வி.மணிவண்ணன் தரப்புக்காக நேற்று மன்றில் முன்னிலையான உதவிச் சட்டத்தரணி சந்தர்ப்பம் கோரினார்.
தமது தரப்பு மூத்த சட்டத்தரணி பிறிதொரு வழக்குக்காச் சென்றுள்ளதால் தமது தரப்பு கருத்தை தெரிவிக்க சந்தர்ப்பம் கோரினார்.
இதனையடுத்து, நீதியரசர்களான யசந்த கொதாகொட, அர்ச்சுனா ஒபயசேகர ஆகியோர் எதிர்வரு; 26ஆம் திகதி வழக்கை ஒத்திவைத்தனர். (நி)