மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள, காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனைக் கடலில் கடந்த பல வருடங்களாக மீன்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட மீன்களும் இன்று காலை கைப்பற்றப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில், கடந்த பல வருடங்களாக பெருமளவிளான கடல் மீன்கள் திருடப்பட்டு வந்துள்ளன.
மீன் வலைகள் வெட்டப்பட்டு படகுகளில் காணப்படும் மீன்கள் திருடப்பட்டு வந்த நிலையில் இன்று காலை கடலில் வைத்து காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களுக்கு சொந்தமான மீன்பிடி படகுகளில் இருந்த மீன்கள் திருடப்பட்டு, அங்கிருந்து வாகனமொன்றில் மீன்கள் கடத்தப்பட்டு, மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் மீன்வாடி ஒன்றுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதையறிந்த காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்கள், காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தி பொலிசாரின் உதவியுடன் குறித்த மீன் வாடிக்குச் சென்ற போது திருடப்பட்ட மீன்களையும் மீன்களை கடத்திய வாகனத்தையும் காத்தான்குடி பொலிசார் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்துள்ளனர்.
காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்களுக்கு சொந்தமான மீன் பிடி படகுகளில் பிடிக்கப்படும் மீன்கள் திருடப்பட்டு வருவதாகவும், குருக்கள் மடம், தேற்றாத்தீவு போன்ற பிரதேசங்களில் இருந்து வரும் சில மீனவர்களே தமது மீன்களை திருடுவதாக பல தடவைகளில் காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்கள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததுடன், கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திலும் முறைப்பாடு செய்திருந்ததாகவும், காத்தான்குடி மற்றும் பூநொச்சிமுனை மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தமது மீன்கள் திருடப்படுவது தொடர்பிலும் ஆர்ப்பாட்டமொன்றையும் ஓரிரு வருடங்களுக்கு முன்னர் நடாத்தியிருந்தனர்.
இந்த நிலையில் இன்று திருடப்பட்ட 100 கிலோவுக்கு மேற்பட்ட மீன்கள் மற்றும் வாகனம் என்பவற்றை கைப்பற்றியுள்ளதுடன், இருவரை சந்தேகத்தின் பேரில் காத்தான்குடி பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஐ.பி.இந்திக தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணையில் ஈடுபட்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் குறிப்பிட்டனர். (சி)