கனடா ரெயின் ரொப் பவுண்டேசனின், மதர் ரூ மதர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், மிகவும் பின்தங்கிய நிலையில் இயங்கி வரும், கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு, உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தூரப் பிரதேசத்தில் இருந்து வந்து, பாடசாலையில் கல்வியை தொடரும் மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளும், கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பாடசாலை உப அதிபர் ச.கருணைராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள், பாடசாலையில் இருந்து 4 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள கஷ்டப் பிரதேசத்தில் இருந்து, யானைத் தொல்லை மற்றும் பல்வேறு சிரமத்திற்கு மத்தியில், கால்நடையாகவே பாடசாலைக்கு வருகை தருகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், மாலை நேர வகுப்புக்களுக்கு நீண்ட தூரம் கரடு முரடான பாதை ஊடாகவே நடந்து செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதனை கருத்திற்கொண்டு, பாடசாலை மாணவர்களுக்கு உதவி வழங்கியமைக்காக, கனடா ரெயின் ரொப் பவுண்டேசன் நிறுவத்திற்கு, பாடசாலை சமூகம் நன்றி தெரிவித்துள்ளது.
இதேவேளை, மட்டக்களப்பு கட்டுமுறிவு பகுதியில், வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டும், பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கும், உலர் உணவுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. (சி)








