மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் நீர் மட்டம், தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியின் காரணமாக வெகுவான குறைந்துள்ளதால், நீர்ப்பாசன திட்டத்தின் ஊடாக மேற் கொள்ளப்பட்டு வரும் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேற்படி இந்த உன்னிச்சை குளத்தில் இருந்தே வலதுகை, இடதுகை வாய்கால்கள் ஊடாக வயல் நிலங்களுக்கும், அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு குடி நீருக்காகவும் நீர் வழங்கப்பட்டு வருகின்றது.
ஜனவரி மாத காலப்பகுதியில் 33 அடி நீர்மட்டம் இருந்த போதிலும் கடந்த சில மாதங்களில் மழை இல்லாத காரணத்தால் தற்போது சுமார் 6அடி அளவிலே நீர் மட்டம் உள்ளது.
இவ் வருடம் ஏற்பட்ட கடும் வெயில் வரட்சி நிலையினால் இந் நிலை ஏற்பட்டுள்ளது.
குடி நீருக்கும் விவசாயத்திற்கும் பாதிப்பு ஏற்படாமல் நீரை பகிர்ந்து வழங்குவது என, அண்மையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவித்த போதிலும், தற்போது விவசாயத்திற்கு போதியளவு நீர் வழங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு நீர் மட்டம் குறைந்துள்ளதாக தெரிய வருகின்றது. (சி)






