மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதுவரை 3 பேர்கள் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். இதனால் இப்பிரதேசத்தில் அச்ச நிலமை காணப்படுகின்றது.

நேற்று வியாழக்கிழமை மாலை மோட்டார் சைக்கிளில் தமது வயலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய விவசாயி ஒருவரை, அம்புஸ்குடா வீதி சங்கர் பாலத்தடி பெண்டுகள்சேனை எனும் இடத்தில் வைத்து, வீதியின் பற்றைக்காட்டுக்குள் நின்ற யானை வழி மறித்து தாக்கியுள்ளது. இதனால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிண்ணையடி வாழைச்சேனையைச் சேர்ந்த க.கிரிதர்ஸன் வயது (26) ஆகும்.
இதேவேளை அன்றையதினம் காலை வயலுக்கு தமது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி ஒருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

கொண்டையன் கேணி வாழைச்சேனையைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சி.கந்தசாமி வயது 52 என்பரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மனைவி அதிர்ஸ்ட வசமாக உயிர் தப்பியுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வாழைச்சேனை ஆதாரா வைத்தியசாலையில் வைக்கப்பட்டு உடற் கூற்று ஆய்வின் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை உறவிணர்களிடம் கையளிக்கப்பட்டது.

இருவரும் ஒரே நாளில் ஒரே பிரதேசத்தில் வைத்து காலை மற்றும் மாலை வேளைகளில் குறித்த யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் பிரதேச மக்களிடேயே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவ் வழியால் நாளாந்தம் வயலுக்கு செல்பவர்கள் மற்றும் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் பீதி அடைந்த நிலையில் காணப்படுகின்றனர்.

தனியாக திரியும் யானையே இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பிரதேசத்திற்கு சென்று யானை வெடிகளை வழங்கியதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

குறித்த யானையினை அப்பகுதியில் இருந்து அகற்றி தருமாறு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளை அப்பகுதி மக்கள் கேட்கின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் மட்டக்களப்பு கரடியனாறு குசலான் மலைப் பிரதேசத்தில் வைத்து, பங்குடாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்ட 2 பிள்ளைகளின் தந்தையும் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (சி)

Previous articleமுள்ளியவளை பிரதேசத்தில் கிணற்றில் இருந்து விவசாயியின் உடலம் மீட்பு
Next articleதையல் உபகரணங்கள் வழங்கிவைப்பு