பதுளை பிரதேசத்தில், போதைப்பொருள் சிறிய பொதிகளை, வீதியோர கால்வாய், மின்சார கம்பங்களுக்கு அருகில் வீசிச் சென்ற ஒருவரை, பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர், ஈசி காஷ் மூலம் பணத்தைப் பெற்று, போதைப்பொருளை விற்பனை செய்து வந்துள்ளார்.
அதாவது, பொது இடங்களில் போதைப்பொருளை வீசி, கொள்வனவாளர்களுக்கு தொலைப்பேசி மூலம் இடத்தை குறிப்பிட்டு, வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
உடுவர பகுதியில் வசிக்கும் 30 வயதான சந்தேக நபர், பதுளை, ஹலிஎல, உடுவர ஆகிய இடங்களில், போதைப்பொருளை விற்பனை செய்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேக நபர் தனது உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த, 60 ஹெரோயின் சிறிய பொதிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைபொருளின் பெறுமதி, 2 இலட்சம் ரூபா என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஊவா பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் மா அதிபர் ஜெகத் பலிககாரவின் ஆலோசனைக்கு அமைய, பதுளை மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (சி)






