புதிய வாக்காளர்களுக்கு பயப்படும் அரசு!எதிர்வரும் தேர்தலில், மூன்றரை இலட்சம் இளைஞர் யுவதிகள் வாக்களிப்பதை தடுப்பதற்கு, மறைமுகமான முறையில் அரசாங்கம் சூழ்ச்சி செய்கின்றது என, பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த யாப்பா அபேவர்த்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
தேர்தல் ஒன்று நெருங்கி வரும் இந்த நேரத்தில், மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் மூன்றரை இலட்சம் வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிட தற்போதய அரசாங்கம் முயல்கின்றது.
2019ம் ஆண்டுக்கான வாக்காளர்; இடாப்பு பதிவு பணிகள் நிறைவடைந்த போதும், 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பினை வரும் தேர்தலில் பயன்படுத்துவதற்கு இந்த அரசு முயல்கின்றது.
2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது, 2014 இறுதியில் உருவாக்கப்பட்ட வாக்காளர் இடாப்பு பயன்படுத்தப்பட்டது.
ஆனால் தற்போது 2019ம் ஆண்டிற்கான வாக்காளர் டாப்பு தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ள போதும், 2018ம் ஆண்டு வாக்காளர் இடாப்பினை பயன்படுத்த எத்தணிக்கின்றார்கள்.
இதனால் 3 இலட்சத்து 27 ஆயிரம் இளம் சந்ததியினரின் வாக்குகள் இல்லாது போய்விடும். மிகவும் சூழ்சமமான முறையில் அரசாங்கம் இதனை முன்னெடுத்து வருகின்றது.
எனவே இந்த வருடம் உருவாக்கப்பட்டுள்ள தேர்தல் டாப்பினைப் பயன்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலினை நடாத்த வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
தற்போதைய இளைஞர் யுவதிகள் நாட்டின் நலனை பற்றி சிந்திக்க தொடங்கிவிட்டார்கள். எனவே இளைஞர்களின் யுவதிகள் வாக்குகளுக்கு இந்த அரசு பயப்படுகின்றது.
அதனால் இளம் பிள்ளைகளின் வாக்குகளை இல்லாமல் செய்வதற்கு முயல்கின்றார்கள். இந்த சூழ்ச்சிக்கு இடமளிக்காது. தேர்தல் செயலகம். 2019 வாக்காளர் இடாப்பினை பயன்படுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறிப்பிட்டுள்ளார். (சி)









