சுங்க சட்டங்களை மீறி கொண்டுவரப்பட்டுள்ள குப்பைகள், பிரித்தானியாவில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் ஒன்று தொடர்புபட்டுள்ளதாகக் கூறி, அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக, இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
தென்னிலங்கையில் செயற்பட்டு வருகின்ற கடும்போக்கு பௌத்த அமைப்புக்களில் ஒன்றான, ஸ்ரீலங்காவை பாதுகாக்கும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பிக்குமார்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பிரிட்டன் அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு எதிர்ப்பை வெளியிட்டனர்.
வெளிநாடுகளில் உள்ள வைத்தியசாலைக் கழிவுகள் அடங்கிய, நூற்றுக்கணக்கான கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டு, அதிலிருந்த குப்பைகள், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அண்மையில் போடப்பட்டிருப்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், வெளிநாட்டுக் குப்பைகளை இறக்குமதி செய்வது குறித்து, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், 2013 ஆம் ஆண்டில் வர்த்தமானி வெளியிடப்பட்டதாக, ஐக்கிய தேசிய முன்னணி தெரிவித்து வரும் நிலையில், அதனை மஹிந்த ராஜபக்ச தரப்பினர் நிராகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பிரித்தானியாவில் இருந்து இந்தக் குப்பைகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாகக் கூறி, அவற்றை மீண்டும் பிரித்தானியாவிற்கே கொண்டு செல்லுமாறு வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இதன் போது, பிரித்தானிய மகாராணி எலிசபத்திற்கு வெட்கமில்லையா?
பிரித்தானியாவின் குப்பைத்தொட்டி ஸ்ரீலங்கா இல்லை.
சர்வதேச சட்டங்களை பிரிட்டன் மதிக்க வேண்டும். போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.(சி)