ஈரானிய எண்ணெய்த் தாங்கிக் கப்பலை, பிரித்தானியா கடந்த வாரம் முதல் தடுத்து வைத்துள்ளமை, ஈரானை அச்சுறுத்தும் தவறான செயற்பாடு என, ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் அமீர் ஹதாமி தெரிவித்துள்ளார்.

அவரது உரை அந்நாட்டு அரசாங்க தொலைக்காட்சி ஊடகத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

ஈரானிய எண்ணெய் தாங்கிக் கப்பல், ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடைகளை மீறி, கடந்த வியாழக்கிழமை சிரியாவுக்கு எண்ணெயை எடுத்துச் செல்ல முயற்சித்த போது, பிரித்தானிய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு, ஐபீரிய தீபகற்பத்திலுள்ள பிரித்தானியாவின் கடலுக்கு அப்பாற்றட்ட தூரப் பிராந்தியமான கிப்ரால்டரில் தடுத்து வைக்கப்பட்டது.

இதனால் கடும் சினமடைந்த ஈரான், தனது யுரேனிய செறிவாக்கலை அதிகரிப்பதாக, அறிவிப்புச் செய்திருந்தது.
இந்த நிலையில், எண்ணெய் தாங்கிக் கப்பலை 14 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு, தமக்கு உச்ச நீதிமன்றத்திடம் இருந்து அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக, கிப்ரால்டர் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பல் கைப்பற்றப்பட்ட சமயத்தில், பதிலடி நடவடிக்கையாக பிரித்தானிய கப்பலொன்றை தடுத்து வைக்கப் போவதாக, ஈரானிய புரட்சிகர காவல் படை அச்சுறுத்தல் விடுத்திருந்தது.

இந்நிலையில் ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் ஹதாமி தெரிவிக்கையில்,

கடந்த மாதம் அமெரிக்க ஆளற்ற விமான மொன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியமை, ஈரான் தனது எல்லைகளைப் பாதுகாக்கும் என்ற தெளிவான செய்தியை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது. என குறிப்பிட்டார்.

ஆனால் அமெரிக்கா, அந்த ஆளற்ற விமானம் சர்வதேச நீர்ப்பரப்பிற்கு மேலாக பயணித்த வேளையிலேயே, ஈரான் அதனை சுட்டு வீழ்த்தியிருந்ததாக குற்றஞ்சாட்டுகிறது.

இதேவேளை, ஈரானிய இராணுவ மேஜர் ஜெனரல் அப்துல்ரஹீம் மௌஸாவி, ஈரான் எந்தவொரு நாட்டுடனும் போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார். (சி)

Previous articleமேல் மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல் நடவடிக்கை
Next articleஅம்பாறை மாவட்ட கடல் கொந்தளிப்பு