வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள, பாராளுமன்ற உறுப்பினர்களான அத்துரலிய ரத்ன தேரர் மற்றும் டிலான் பெரேரா ஆகியோர், இன்று மதியம் யாழ்ப்பாணத்திலுள்ள டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்தனர்.
டான் ரீவியின் தலைமையகத்திற்கு வருகை தந்த குழுவினர், டான் குழுமத் தலைவர் எஸ்.எஸ்.குகநாதனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இதன் போது, சமகால அரசியல் நிலவரம் தொடர்பிலும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலவரம் தொடர்பிலும், டான் ரீவியின் குழுமத் தலைவருடன் கலந்துரையாடியுள்ளனர்.
தொடர்ந்து எமது தலைமையகத்தில் வைத்து எமது செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரர், நாட்டில், சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கினார்.
எதிர்வரும் தேர்தலில், நாட்டில் உள்ள மக்கள் தமிழ், சிங்கள மக்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய, நாட்டினை துண்டாட முயற்சிக்காத ஒருவரை எமது நாட்டின் தலைவராகத் தேர்தெடுக்க வேண்டிய அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், தெரிவு செய்யப்படும் தலைவர் இனவாதத்தைத் தூண்டாத வகையில் செயற்படுவது மிக முக்கியமானதாகும் எனவும் குறிப்பிட்டார்.
இதற்கமைய நாட்டுக்கான சிறந்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(சி)