அக்கரைப்பற்று அன்னை சாரதா வித்தியாலயத்தில் இன்று ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக பாடசாலை மாணவர்கள் உடன் வெளியேற்றப்பட்டதுடன், இராணுவத்தினரை பாடசாலைக்கு அழைத்து விசேட சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையான அன்னை சாரதா வித்தியாலயத்தில் இச்சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில் அருகில் இருந்த ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களினால் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
வழமைபோன்று பாடசாலை அதிபர் இன்று காலை பாடசாலையை திறந்து மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டபோது பாடசாலை கட்டடமொன்றின் மேல்மாடியின் அன்டசீட் பகுதியில் சீட் ஒன்று அகற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளார். உடனே அதிபர் பொலிசாருக்கும் கல்வி உயராதிகாரிகளுக்கும் தகவலை வழங்கியுள்ளார். இதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அக்கட்டடத்தில் இருந்த மாணவர்களையும் வெளியேற்றியுள்ளார்.
இச்செய்தியானது காட்டுத்தீபோல் கிராமத்தில் பரவிய நிலையில் பெற்றோர்கள் முண்டியடித்துக்கொண்டு தங்களது பிள்ளைகளை பாடசாலையில் இருந்து அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில் அங்கு விரைந்த இராணுவத்தினர் மற்றும் பொலிசார், விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்டவர்கள் பாடசாலையின் குறித்த பகுதியை விசேட சோதனைக்குட்படுத்தியதுடன் ஏனைய கட்டடங்களையும் சுற்றுப்புறங்களையும், பாடசாலையில் அமைந்துள்ள கிணறு என்பவற்றையும் முற்றாக பரிசோதனை செய்தனர்.
எனினும் அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் மீட்கப்படவில்லை.
இச்செய்தியை அறிந்த குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களின் விருப்பின் பெயரில் வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதையும் காண முடிந்தது.
மாணவர்களின் கற்றல் நடவடிக்கை இன்று பாதிக்கப்பட்டபோதும் மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் கண்ணும் கருத்துவமாக இருந்து செயற்பட்ட பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களை, பெற்றோர்கள் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.(சி)