நேபாளத்தில் அண்மைய நாட்களாக பெய்து வரும் கனமழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மோசமாக பாதிப்படைந்துள்ளதுடன், உயிரிழப்பு எண்ணிக்கை 88 ஆக அதிகரித்துள்ளது.
கன மழை காரணமாக அந்நாட்டில் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 10 ஆயிரத்து 385 வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் பல நகரங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து காணப்படுகின்றது.
பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல முடியாத சூழ்நிலை காணப்படுவதால் அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர்
ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவேளை, வெள்ளப்பெருக்கை அடுத்து நீர் சார்ந்த நோய்கள் பரவக்கூடும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர் மழையால் பாதிப்படைந்துள்ள ஆயிரக்கணக்கான மக்களுக்கு முறையான சுகாதார சேவைகளை உறுதி செய்யும் வகையில், நீரால் பரவும் நோய்களை தடுப்பதற்கான சாத்திய நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச அமைப்புகளின் உதவியை நேபாள அரசு வேண்டியுள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் நீடித்துவரும் கனமழையால் இதுவரை 31 பேர் காணமல்போயுள்ளதுடன், 41 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். (நி)








