நுவரெலியா தலவாக்கலை நகரில், தலவாக்கலை லிந்துலை நகர சபையின் அனுமதி பெறாது மருத்துமனையை நடாத்தி வந்த வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நகர சபையின் அனுமதி பெறாது, சுமார் இரண்டு வருடங்களாக மருத்துவமனையை நடத்திய வந்த வைத்தியர், இன்று மதியம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை சாய்ந்தமருது பகுதியை சேர்ந்த 49 வயதுடைய தம்பி மரிக்கார் மொஹமத் ஸ்மையில் என்ற வைத்தியரே கைது செய்யப்பட்டுள்ளார். வைத்தியர், எம்.பி.பி.எஸ் என்ற தகைமையை கொண்ட வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி, சில பெண்களுக்கு கருக்கலைப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் மருத்துவமனையில் தொழில் புரிந்து வந்த தாதியரினால், தலவாக்கலை லிந்துலை நகர சபை தலைவர் அசோக்க சேபாலவிடம் அறிவித்ததை தொடர்ந்து, வைத்தியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது, நகர சபை தலைவர் மற்றும் பொலிஸார், வைத்தியசாலைக்கு சென்று சோதனையிட்ட போது, குறித்த வைத்தியர் எம்.பி.பி.எஸ் தகைமையுடையவர் அல்ல என்பது, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், அவரிடம் இருந்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டது என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, மருத்துவமனையில் இருந்து பெருந்தோகையான மாத்திரைகளையும் உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட வைத்தியரை, நுவரெலியா நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.(சி)







