ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவில் உருவாகிய நாட்டுக்காக ஒன்றிணைவோம் விசேட வேலைத் திட்டமானது நேற்று முல்லைத்தீவில் ஆரம்பித்துவைக்கப்பட்டது
அந்த வகையிலே நேற்று தொடக்கம் எட்டாம் திகதி வரை இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் இன்று இரண்டாம் நாள் 333 நிகழ்ச்சித்திட்டங்கள் இடம்பெற இருப்பதாக நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்து இருந்தார்
அந்த அடிப்படையிலேயே இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன
அந்த வகையில் இன்று காலை ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், மாங்குளம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் கழிவகற்றல் மற்றும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. பனிக்கன்குளம் கிராம அலுவலர் வளாகம், கலைமகள் முன்பள்ளி வளாகம், பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் சிரமதானப் பணிகள் இடம்பெற்றதோடு மாங்குளம் மகாவித்தியாலய வளாகமும் சிரமதானம் செய்யப்பட்டிருந்தது. அத்துடன் மாங்குளம் A – 9 பிரதான வீதி ஓரமாக பிளாஸ்டிக் மற்றும் ஏனைய பொருட்களை அகற்றுகின்ற நடவடிக்கையும் பிரதேசசபையின் கழிவகற்றல் வாகனத்தின் உதவியோடு பிரதேச மக்கள் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.
அத்துடன் ஜனாதிபதியிடம் தெரிவிக்க உங்கள் நகரத்திற்கு! என்கின்ற செயல் திட்டத்தின் மூலமாக இன்று காலை முதல் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக வளாகத்தில் மக்களுடைய குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்கக் கூடிய வகையில் மக்களுடைய குறைகளைக் கேட்டு அறிவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் விசேட பகுதியினர் வருகை தந்து மக்களுடைய குறைகளை எழுத்து மூலமாகவும், ஏனைய ஆவணங்கள் மூலமாகவும் பெற்றுக்கொள்கின்ற செய்ய திட்டம் ஒன்றும் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.