நாட்டின், இறையாண்மை, சுதந்திரம் அனைத்தையும் இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, லங்கா சம சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.
எமது நாட்டின் சுதந்திரம் இறையாண்மை அனைத்தையும் இல்லாமல் செய்கின்ற வேலைத்திட்டம், கடந்த 2015ம் ஆண்டு ஆட்சி மாற்றம் இடம்பெற்றதன் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு நாட்டினை தாரை வார்க்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கான இரண்டு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு முடிவடைந்துள்ளது.
ஒன்று அக்சா உடன்படிக்கை இது பாராளுமன்றத்திற்கும் யாருக்கும் தெரிவிக்காது செய்யப்பட்டுள்ளது.
அதன் பின்னர் எம்.சி.சி எனும் பெயரிலான உடன்படிக்கை. இதனை நடைமுறைப்படுத்துவதற்காக அமெரிக்கா 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்திருக்கின்றது.
இது ஒரு புறம் இருக்க, சோபா எனும் ஒரு ஒப்பதத்தினை செய்வதற்கு, இந்த அரசு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது.
இதன் ஊடாக, எமது நாட்டில் அமெரிக்க இராணுவம் அனுமதியின்றி உள்நுழைந்து. எமது இராணுவ முகாங்களையே தமது தேவைக்கு பயன்படுத்துவதற்கு முடியும் என சொல்லப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல எமது விமானத்தளம் துறைமுகம் அனைத்தினையும் எந்த நேரத்திலும் அமெரிக்கா பயன்படுத்த முடியும் அவ்வாறுதான் இந்த ஒப்பந்தம் சொல்லுகின்றது.
இவை அனைத்தினையும் மறைத்து எமது நாட்டை காட்டிக்கொடுக்கும் துரோகமான அரசாங்கமாக இது இருக்கின்றது.
எனவேதான் இந்த விடயங்களை மக்களுக்கு தெரிவித்து, இந்த செயற்பாட்டிற்கு எதிராக மக்கள் தமது எதிர்ப்பை வெளியிட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)









