யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் உள்ள குளங்களில், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை, வனஜீவராசிகள் திணைக்களம் தடுத்து வருவதாக, நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தாம் பல ஆண்டுகளாக, குளங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது தேசிய பூங்கா எனும் பெயரில், வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களில் மீன் பிடிக்கச் செல்லும் போது, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தடுத்து வருவதாகவும், இதனால் தாம் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், நன்னீர் மீன்பிடியாளர்கள் கவலை வெளியிட்டனர்.
இதேவேளை, எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து, எவரும் எந்தவொரு குளத்திலும் மீன்பிடியில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கேவில் கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், யாழ். மாவட்ட செயலர், பிரதேச செயலர் உட்பட பல்வேறு தரப்பினருக்கும், பிரச்சினைகள் தொடர்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், வடமராட்சி கிழக்கு நன்னீர் மீன்பிடியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். (சி)