தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பில், கேள்வி எழுப்பும் பிரேரணையின் விவாதத்தில் உரையாற்றும் போது இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது காலத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலமைப்பு விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை என குற்றம்சாட்டியிருக்கின்றார்.
இது முழுவதும் பொய்யான குற்றச்சாட்டாகும் 18 தடவைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவுடன் அரசியல் பகிர்வு தொடர்பில் பேச்சு நடாத்தியது.
ஒரு தடவை மாத்திமே இந்த பேச்சுவார்த்தையை நாம் புறக்கணித்தோம். அது ஏன் தெரியுமா?
ஒவ்வொரு பேச்சுக்களிலும் எங்கள் முன்மொழிவுகளை கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு உரிய பதில்களை அளிக்க தவறினர்.
இதானல்தான் நாம் பேச்சினை முறித்துக் கொண்டோம். மீண்டும் ஒரு தடவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மகிந்த ராஜபக்சவை சந்தித்து, இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து பேசியதன் அடிப்படையில் மீள பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டது.
அப்போது, 3 கூட்டங்களுக்கு நாம் சென்றோம். முதலாவது கூட்டத்திலும் அரச தரப்பு வரவில்லை, இரண்டாவது தடவையும் சென்றோம் அரச தரப்பு வரவில்லை. 3 ஆவது தடவையும் சென்றோம் ஆனால் அவர்கள் வரவில்லை.
இதனை புரிந்து கொண்டால் யார் அரசியல் தீர்வு பேச்சினை கைவிட்டது எனது புலப்படும்.
இன்று, அரசின் இறுதிக்கால கட்டம், அரசியலமைப்பு தொடர்பில் பேச முடியாது என மகிந்த ராஜக்ச கூறுகின்றார்.
அத்தோடு ஒரு அரசின் ஆரம்ப காலத்தில்தான் இதனை பேச வேண்டும் என கூறுகின்றார்.
இந்த அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு, பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்ததை தொடர்ந்து, டிசம்பர் மாதமே இதற்கான முன்னெடுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
அனைத்துக் கட்சிகளும் இதனை நிறைவேற்ற ஆதரவு நல்கின. யாருமே மறுத்துக் கூறவில்லை. இதன்பின் பல உப குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராயப்பட்டன. மக்களுடன் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. அறிக்கைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே இப்பொழுது மக்களிடம் கலந்துரையாட வேண்டும் என கூற முடியாது.
இதேவேளை, வடக்கு கிழக்கு தவிர்ந்த 7 மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் புதிய அரசியலமைப்பு மாற்றத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
முன்மொழிவுகளையும் முன்வைத்துள்ளனர். எனவே, எல்லா முன்மொழிவுகளிலும், நீங்களும் பெரும்பான்மை கட்சிகளின் முன்மொழிவுகளும் உள்ளடங்குகின்றன.
பெரும்பான்மையின மக்கள் அதிகாரங்களை பகிர்ந்து கொள்ள மறுக்கின்றனரா? இல்லை. அவர்களை வழிநடத்துபவர்களே இவ்வாறு தவறாக குறிப்பிடுகின்றனர்.
நாங்கள் எங்களை சிறுபான்மையினர் என குறிப்பிடவில்லை. நாட்டினுடைய எண்ணிக்கையில் நோக்கின்ற போது, குறைவானவர்களாக இருக்கின்றோம்.
ஆனால் எமக்கும் ஒரு சமத்துவம் இருக்கின்றது. சமத்துவமாக நடாத்தப்பட வேண்டும். நாட்டில் வாழும் பிறர் பெறும் உரித்துக்களை நாமும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எங்களுடைய மக்கள், தாம் வாழ்கின்ற பிரதேசங்களில் தீர்மானங்களை எடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
இதனையே 2006 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவும் வலியுறத்தியிருந்தார். ஆனால் இன்று அதற்கு நேர் எதிராக செயற்படுகின்றார்.
எனவே எதிர்க்கட்சி தலைவர் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களையே இன்று குறிப்பிட்டு வருகின்றார்.
மிகவும் பிழையான தோற்றப்பாட்டையே இங்கு காண்பித்துள்ளார்.
சபையில் முன்வைத்துள்ள விடயங்கள் தொடர்பில், பிழையான ஒரு எண்ணத்தையே அவர் இன்று வெளிப்படுத்தி வருகின்றார்.
எதிரக்கட்சி தலைவர் தனது ஆட்சிக்காலத்தில், இந்தியா உட்பட பல நாடுகளுக்கு அதிகார பகிர்வு தொடர்பில் வாக்குறுதிகளை வழங்கியுள்ளார். அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளார். ஆனால் இன்று தனது நிலைப்பாடுகளில் மாற்றமடைந்து விட்டார்.
நான் ஒன்றை குறிப்பிடுகின்றேன். இன்றைய அரசின் காலம் முடிவடைந்தாலும், இந்த பாராளுமன்றத்திற்கு.
இன்னும் ஒரு வருடம் இருக்கின்றது.
இந்த காலப்பகுதியிலும் எங்களது முழுமையான ஒத்துழைப்பினை நாங்கள் தருகின்றோம். ஏனென்றால் இந்த நாட்டின் வெற்றி இந்த புதிய அரசியலமைப்பில்தான் தங்கியுள்ளது. இதனை அனைவரும் குறித்துக்கொள்ள வேண்டும்.
இரா.சம்பந்தன் கொண்டுவந்த இந்த பிரேரணை, இந்த விடயத்தை நன்றாக வெளிக்காட்டியும் உள்ளது.
இந்த முயற்சியில் நாம் வெற்றி பெறாத சந்தர்ப்பத்தில், இந் நாட்டின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்.
மிகவும் அழிவான பாதைக்கும் அது இட்டுச் சென்று விடும். அது, இதற்கு முன்பு காணாத அழிவாக கூட இருக்கலாம்.
ஆகவே அரசும் எதிர்க்கட்சியும் இணைந்து இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டி, சமூக ஒப்பந்தம் ஒன்றினை நாம் ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராவே உள்ளோம். என குறிப்பிட்டுள்ளார். (சி)