தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வர வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க, ஏன் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைக்கிறோம் என்பது தொடர்பில் நீண்ட நேரமாக விளக்கமளித்தார்.
இதற்கமைய ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் அறிந்திரும் அரசாங்கம் மக்களைக் காக்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம்சுமத்தினார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டை பாதுகாக்கத் தவறிய அரசு பதவி விலக வேண்டும்.
இந்த அரசு பதவி விலகினால் உடனடி தேர்தலுக்கு செல்லலாம்.
அண்மைய தாக்குதல் முதல் அனைத்து பாதகார செயல்களுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும். நாங்கள் யாருக்கும் வால்பிடிக்கவில்லை.
கடந்த அரசியலமைப்பு மீறலை நாங்கள் எதிர்த்தோம்.
இன்று நாங்கள் அரசியலமைப்பின்படி அரசுக்கு எதிராக ஒரு யோசனையை முன்வைத்துள்ளோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதில் என்ன முடிவை எடுக்கப் போகிறது? அவர்கள் ஒரு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
நாட்டின் பாதுகாப்பை கேள்விக்கு உட்படுத்தியவர்கள் கண் முன் தெரியும்போது கூட்டமைப்பு சரியான முடிவை எடுக்க வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவர் தனது எம் பிக்களை அழைத்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க கேட்க வேண்டும்.எனவே இந்த அரசை காப்பாற்ற முயலவேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க விரும்புகிறேன்.
இந்த அரசுக்கு பாராளுமன்ற பெரும்பான்மை மட்டுமல்ல மக்களிடத்திலும் பெரும்பான்மை ஆதரவு இல்லை.
அரசை நடத்தும் உரிமை இந்த அரசுக்கு கிடையாது.
முஸ்லிம்கள் பலர் பலதடவை எச்சரிக்கை விடுதிருந்தும் அடிப்படைவாதிகள் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை.
எச்சரிக்கை குறித்து வந்த கடிதங்களுக்கு நன்றி தெரிவித்து பதில் அனுப்பப்பட்டதே தவிர நடவடிக்கை இல்லை.
ஜனாதிபதி அலுவலகம் அதற்கு பதில் கூட அனுப்பியதில்லை. இதற்கு ஒரு அரசு தேவையா? சந்தேகநபர்களை சுதந்திரமாக உலாவ இடமளித்தது அரசு.
மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அக்கறை இருந்திருந்தால் ஒரு சிறிய தகவலையாவது கூறியிருக்கலாம்.
ஆனால் ஒரு பெரிய சம்பவத்தை எதிர்பார்த்து வேண்டுமென்றே சம்பவங்களுக்கு இடம்கொடுத்துள்ளீர்கள்.
மோட்டார் சைக்கிளில் வைத்து பரிசோதனை செய்யப்பட்ட குண்டு தொடர்பில் பல தகவல்கள் கிடைத்தும் அதை தேடவில்லை.
விளையாட்டு அரசாங்கம் ஒன்று இருந்திருந்தால் கூட இதைவிட நன்றாக செயற்பட்டிருக்கும்.
அமைச்சர் பாதுகாப்பு பிரிவு இது தொடர்பில் அறிவுறுத்தப்பட்ட போதும் மக்களுக்கு ஏன் அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை? எல்லாம் தெரிந்தும் அதனை சொல்லாமல் நாட்டை நிர்வகிக்க தெரியாத அரசை என்ன செய்வது? இப்படியான குற்றவாளிகள் நாட்டை ஆளலாமா ? இவர்கள் ஆட்சி செய்ய யோக்கியதை கிடையாது.
இவர்கள் ஆள்வதற்கு தகுதியற்றவர்கள்.
அதனால் தான் இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்தோம்.
இந்த பிரேரணை வெற்றியடைய வேண்டும்.
இதற்காகவே இந்த அரசை காப்பாற்ற முயலவேண்டாமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கேட்க விரும்புகிறேன் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை, அரசிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதாக வாக்கெடுப்பு நாளை பிற்பகல் 6 மணிக்கு பாராளுமன்றில் இடம்பெறவுள்ள நிலையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சி செயற்படும் என்று அந்தக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி கூறியுள்ளார்.
இந்நிலையில், அராங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதா, எதிராக வாக்களிப்பதா என்பது தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முன்தினம் கலந்துரையாடியிருந்த நிலையில், நாளை காலை 10 மணியளவில் கொழும்பில் நடைபெறவுள்ள தமது கட்சிக் கூட்டத்தின் பின்னரே இது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார். (நி)







