யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில், தனியார் காணியை அபகரித்து அமைக்கப்படும் விகாரை தொடர்பில், நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி பகுதியில் தனியார் காணியை அபகரித்து பௌத்த மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பௌத்தர்களே வசிக்காத பகுதியில் விகாரை அமைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இன்று, விகாரை அமைக்கப்படுவது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இவ்வாறு பதில் அளித்தார்.
வலி வடக்கு கிராமங்களில் மிக நீண்டகாலத்திற்கு முன்னர் பேக்கரிகள், சீமெந்து தொழிற்சாலைகளில் பணியாற்றிய பௌத்தர்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்காக சுமார் 20 பரப்பு காணியில் 1946ம் ஆண்டு காலப்பகுதியில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டது.
பௌத்த விகாரைக்கு சொந்தமான காணியில் விகாரை கட்டப்படுவதில் எமக்கு ஆட்சேபனைகள் எதுவும் இல்லை.
ஆனால் பௌத்தர்களே வாழாத பகுதியில் மக்களுக்கு சொந்தமான காணியை அபகரித்து மகாபோதி அமைப்பது பொருத்தமற்ற காரியம்.
இந்நிலையில் தனியார் காணியில் மகாபோதி அமைப்பதற்கு பௌத்த பிக்கு ஒருவர் வலி,வடக்கு பிரதேசசபையிடம் அனுமதி கோரியுள்ளார்.
ஆனாலும் நாம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. எனவே அனுமதியில்லாமல் தனியார் காணியை ஆக்கிரமித்தும் மகாபோதி அமைக்கப்படுவதை எதிர்த்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டார். (சி)







