தேசிய பாதுகாப்பு கூட்டங்களுக்கு சமூகமளிக்க தேவை இல்லை என ஜனாதிபதி கூறியதாக பாதுகாப்பு செயலர் என்னிடம் தெரிவித்தார் என்று கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஏப்பில் 21ம் திகதி குண்டுத் தாக்குதலினை தடுக்காமைக்கான காரணத்தினை கண்டறிவதற்க்காக அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவிக்குழுவின் முன் இன்று வாக்குமூலம் வழங்கியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு ஏப்பிரல் 20ம் திகதி முதல் இன்றுவரை பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வருகின்றேன். குற்றவியல் விசாரணைப் பிரிவு பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கியது. பயங்கரவாத தடுப்பு பிரிவு முதலில் குற்றவியல் விசாரணைப் பிரிவுடன் இணைந்து செயற்பட்டது. நான் பொலிஸ்மா அதிபராக பொறுப்பேற்றதன் பின்னர் அதனை தனியாக என் கீழ் கொண்டு வந்திருந்தேன். அதன் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நாலகசில்வா கடமையாற்றி வந்திருக்கின்றார். தேசிய புலனாய்வுத்துறையின் அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் செயற்படுகின்றார்கள். அதன் பணிப்பாளராக கடமையாற்றுபவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு பதிலளிக்க வேண்டியவராக இருக்கின்றார்.
தேசிய பாதுகாப்பு கவுன்ஸ்சில் கூட்டங்களுக்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு விடுப்பார். தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் நான் தொடர்சியாக பங்கு பற்றி வந்தேன். ஆனால் கடந்த 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாத்திலிருந்து என்னை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அப்போதய பாதுகாப்பு செயலர் கபில வைத்தியரத்தின அறிவுறுத்தினார். அதற்கு காரணம் கேட்டபோது ஜனாதிபதி அவர்களின் உத்தரவு என்று தெரிவித்தார் என்று பாராளுமன்ற தெரிவுக்குழுவின் முன் வாக்குமூலமளித்தார்.