நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, தெற்கு, தென் மேற்கு மற்றும் மேற்கு கடற் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்களை, உடனடியாக கரை திரும்புமாறு, கடற்படையின் ஊடகப் பேச்சாளர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த கடற் பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும், இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் வட மேல், மேல், தென் மேல் மற்றும் தென் கடற்பரப்புகளில், எதிர்வரும் 20 ஆம் திகதி வரை காற்றுடன் கூடிய மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் இருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக, அம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில், பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் சில இடங்களில், மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில், காற்றானது தென் மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில், காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.
அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கைக்கு அண்மித்த கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை, மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. (சி)








