தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துசமய விவகார அமைச்சும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் எற்பாட்டில் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
இவ் யோகா தின நிகழ்வுகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் தம்பிலுவில் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று இடம்பெற்றது .
இதன்போது அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு, நந்தி கொடியேற்றப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றப்பட்டு திருக்கோவில் திருஞானவாணி முத்தமிழ் இசை மன்றத்தின் அறநெறி மாணவர்களின் அறநெறி கீதம் மற்றும் தேவாரம் இசைக்கப்பட்டதுடன் திருக்கோவில் பிரதேச செயலாளர் எஸ். ஜேகராஜன் அவர்களின் வரவேற்பு உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.
சர்வதேச யோகா தினத்தினை முன்னிட்டு திருக்கோவில் பிரதேசத்தில் இருந்து 17 பாடசாலைகளை சேர்ந்த சுமார் 1500 மாணவர்கள் யோகா தின நிகழ்வில் கலந்து கொண்டதுடன், மாணவர்களுக்கான இரண்டாம் கட்ட யோகா கலை பயிற்சிகளும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் யோகா கலையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் யோகா கலை வளவாளர்களுக்கான கொடுப்பனவு காசோலைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக திருக்கோவில் ஸ்ரீசித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு சிவஸ்ரீ நீ.அங்குசநாதக் குருக்கள், பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன், கௌரவ அதிதியாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி ஹேமலோஜினி மற்றும் மாவட்ட, பிரதேச கலாசார உத்தியோகத்தர்கள்,குருமார்கள், ஆலய நிருவாகிகள்,கல்வியாளர்கள் அறநெறி ஆசிரியர்கள் என பலரும் கலந்த கொண்டு இருந்தனர்.(சி)