திருகோணமலை கிண்ணியா நகர சபையின் விசேட அமர்வு, நகர சபை சபா மண்டபத்தில், இன்று நடைபெற்றது.

தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீம் தலைமையில் இடம்பெற்ற அமர்வில், சபை உறுப்பினர்களினால் கேள்விகள் தொடுக்கப்பட்டன.

கிண்ணியா நகர சபையினால், நோன்புப் பெருநாள் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட இருந்த அங்காடி வியாபாரம், பாதுகாப்பு நலன் கருதி சபையினால் ஏகமானதாக தடை செய்யப்பட்டிருந்தது.

அதனை மீறி அங்காடி வியாபாரம் இடம்பெற்றுள்ளதுடன், பண மோசடியும் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் குழு அமைத்து, உரிய அதிகாரிகளை அழைத்து விசாரனை செய்யுங்கள் எனவும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட், தவிசாளரிடம் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், நகர சபை ஊழியர் இடமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பாகவும், தவிசாளரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

உறுப்பினர் மஹ்தி, கோழிக்கடை குத்தகைக்கு வழங்கப்பட்டமை தொடர்பாக தவிசாளரிடம் கேட்க போது, அதற்கு தவிசாளரினால் உரிய பதில் வழங்கப்பட்டது.

இதன் போது, சில உறுப்பினர்கள் தன்மீது பொய்க் குற்றச்சாட்டுக்களையும் மோசடிக்காரணாக காட்டுவதற்கு முனைவதாகவும், அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனவும், கிண்ணியா நகர சபை தவிசாளர் நளீம் தெரிவித்தார்.

தொடர்ந்து, சபையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்டபான விடயங்கள் ஆராயப்பட்டதுடன், சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, சபை அமர்வு நிறைவு பெற்றது. (சி)

Previous articleமட்டு இந்துக் கல்லூரி மைதானம், புனரமைப்புச் செய்யப்பட்டு திறந்து வைப்பு
Next articleகிளிநொச்சி வைத்தியசாலையில் சுகாதார சீர்கேடு : மக்கள் கடும் விசனம்