ஆலயங்கள் சமயப்பணிகளை மட்டும் அல்லாது சமூகப்பணிகளையும் முன்னெடுக்க வேண்டும் எனும் கருத்தே இந்துமதத்தில் ஆழமாக சொல்லப்பட்டுள்ளது.

அதற்காகவே இறைவன் அருளால் ஆலயங்கள் தோற்றுவிக்கப்பட்டது எனவும் கூறப்படுகின்றது.

முன்னொரு காலத்தில் ஆலயங்கள் தோறும் உருவாக்கப்பட்ட அறநெறிப்பாடசாலைகளும் அன்னதானச்சாலைகளும் இன்றுவரை இயங்கி வருவதையும் அதன் மூலம் சமூகம் பல்வேறு நன்மைகளை அடைந்து வருவதையும் இங்கு குறிப்பிட முடிகின்றது.

இவ்வாறான சிறந்த பணிகளையே அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட,  பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய நிருவாகம் முன்னெடுத்து வருகின்றது.

பல ஆலயங்களின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் உழைத்து வரும் இவ்வாலயம் தற்போது தாய் தந்தையற்ற மாணவர்களுக்கும் உதவிகளை வழங்கியுள்ளது.

இதற்கமைவாக அக்கரைப்பற்று விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தில் இருந்து கல்வி கற்றுவரும் மாணவர்களுக்கு தேவையான பாடசாலை சீருடைகள் உள்ளிட்ட ஆடைகளை வழங்கியுள்ளது.

விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் தலைவர், த.கயிலாயபிள்ளையின் தலைமையில் இன்று இடம்பெற்ற ஆடைகள் கையளிக்கும் நிகழ்வில், ஆலயத்தின் வண்ணக்கர் க.கார்த்திகேசு மற்றும் பொருளாளர் பி.ராஜஸ்ரீ உள்ளிட்ட விபுலானந்தா அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். (சி)

 

Previous articleராஜனுக்கு 1236 மில்லியன் வழங்கிய ரிஷாட் : அளுத்கமகே
Next articleநுவரெலியா ஹட்டனில், கையெழுத்து வேட்டை