ஜப்பானுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு இலங்கை ஆர்வமாக உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதாவுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இருவருக்கம் இடையிலான சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றது.
இதன்போது, கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இரு நாடுகளினதும் சமுத்திர பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டிருப்பதால் சர்வதேச சமுத்திர பாதுகாப்பைப்போன்று சர்வதேச கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளினதும் கடற்படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவதற்கு ஜப்பானும் இலங்கையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கடற்படைத்துறையில் தற்போது இருந்துவரும் நெருங்கிய ஒத்துழைப்பை இராணுவத்திற்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
இரண்டு நாடுகளுக்கிடையேயும் கைச்சாத்திடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை இந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையின் அபிவிருத்திக்காக இலங்கை, ஜப்பான் மற்றும் இந்தியாவுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள முத்தரப்பு உடன்படிக்கை, கொழும்பு துறைமுகத்தின் கொள்ளளவை அதிகரிப்பதற்கு முக்கியமானதொரு நடவடிக்கையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவித்த ஜப்பானிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கென்ஜி ஹரதா, ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையேயான பாதுகாப்பு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு கடந்த சில வருடங்களாக துரிதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்து சமுத்திரத்தில் இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், சமுத்திரம் இரண்டு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற வகையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான சமுத்திர ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர், ஜப்பான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றல் பணிப்பாளர் மற்றும் இராஜாங்க அமைச்சரின் நிறைவேற்று உதவியாளர் ஆகியோர் கலந்துகொண்டனர். (நி)









