சோமாலியாவின் கிஸ்மேயோ துறைமுக நகரில் உள்ள விடுதியொன்றில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிஸ்மேயோ நகரில் உள்ள அசாசே விடுதிக்கு அரசியல் கட்சியினர் மற்றும் உள்ளுர் அதிகாரிகள் செல்வது வழக்கம்.
இந்நிலையில், குறித்த விடுதிக்குள் தற்கொலை குண்டுதாரிகள் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி வெடிக்க செய்துள்ளனர்.
அத்துடன், துப்பாக்கிப்பிரயோகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த சோமாலியா பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகளுடன் பதில் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இந்த தாக்குதல்களில் ஊடகவியலாளர் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு சோமாலியா நாட்டின் அல் ஷபாப் என்ற கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.
கனடா நாட்டை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் ஹோடன் நலாயே எனும் ஊடகவியலாளரே உயிரிழந்தவராவார்.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர், சோமாலியாவில் 1976ம் ஆண்டு பிறந்து, பின்னர் கனடா நாட்டில் வளர்ந்துள்ளார்.
உலகம் முழுவதுமுள்ள சோமாலிய பார்வையாளர்களுக்காக வலைத்தள அடிப்படையிலான சர்வதேச காணொளி தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். (நி)








