பொலிஸ் திணைக்களத்திலுள்ள அதிகாரிகளது அலட்சியத்தினால், சேவையில் இருந்து நீக்கப்பட்ட பொலிஸ் சிப்பாய்கள், கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு முன்பாக முகாமிட்டு, கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
தங்களுக்கு உரிய வகையில், மீள் நியமனம் வழங்கும் வரை உயிர்நீங்கினாலும் போராட்டத்தில் இருந்து விலகப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை, பொலிஸ் சேவையில் இருந்து நீங்கிய முன்னாள் பொலிஸ் அதிகாரிகள் பலர், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக, இன்று பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
பாராளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களுக்கும், அதேபோல அரச தலைவரான ஜனாதிபதிக்கும், பல்வேறு கோரிக்கைக் கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்ட போதிலும், இதுவரை தீர்வு கிடைக்காத நிலையிலேயே, இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தாக, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட, முன்னாள் பொலிஸ் அதிகாரி பிரசாத் அபேகுணசேகர…
‘2005 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை, பொலிஸ் திணைக்களத்தின் சில திறனற்ற செயற்பாடு காரணமாக சேவையில் இருந்து விலக நேரிட்ட சிப்பாய்களே இன்று ஜனாதிபதியை சந்திக்க வந்துள்ளோம்.
பல மாதங்களாக ஜனாதிபதிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதங்கள் எழுதினோம்.
சந்திக்கவும் சந்தர்ப்பம் கேட்டோம்.
ஆனால் ஒரு கடிதத்திற்கும் பதில் கிடைக்கவில்லை.
அரசியல் அடிவருடிகளுக்கு பதவிகளும், பட்டங்களும் கிடைத்த போதிலும் எமக்கு ஒரு பதில்கூட கிடைக்கவில்லை.
அண்மைய ஊடக சந்திப்பின் போதும், அதேபோல ஜனாதிபதி, தேர்தல் மேடையிலும் சேவையில் இருந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் நிபந்தனையற்று இணையலாம் என்று கூறியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், சுயேற்சையாக நாங்கள் இணைவதற்கு தயாரான போதிலும் இதுவரை சமிக்ஞை கிடைக்கவில்லை.
இராணுவத்தில் 11 ஆயிரம் சிப்பாய்களுக்கு ஒரே இரவில் மீள் நியமனம் வழங்கப்பட்ட போதிலும், இங்கே 3 ஆயிரம் பேரே உள்ளனர்.
ஜனாதிபதி தயார் என்ற போதிலும் பொலிஸ் ஆணைக்குழு தடுக்கின்றது.
தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு உயிர்பிரிந்தாலும் நீங்க மாட்டோம்’
என குறிப்பிட்டுள்ளார். (சி)






