முல்லைத்தீவு சுதந்திரபுரம் படுகொலையின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டுள்ளது.

1998ஆம் ஆண்டு, ஜீன் மாதம் 10ஆம் திகதி, சுதந்திரம் பகுதியில் இலங்கை இராணுவத்தின் விமானத் தாக்குதல் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட செல் தாக்குதல்களில் அநியாயமாக படுகொலை செய்யப்பட்ட 33 அப்பாவி பொது மக்களுடைய 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்று உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.

வன்னிக்குறோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பின் ஏற்பாட்டில் இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு சுதந்திரபுரம் நிரோஜன் விளையாட்டுக் கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விசேட நினைவிடத்தில் உணர்வு பூர்வமாக இவ் அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் பொதுச்சுடரினை, குறித்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை பறிகொடுத்த புஸ்பநாதன் இந்திராணி தம்பதிகள் ஏற்றிவைத்தனர்.

அதனைத் தொடர்ந்து ஏனையவர்களும் திருவுருவப் படத்துக்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்வில் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.

குறித்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஆண்டிஐயா புவனேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் செல்லையா பிரேமகாந்த் மற்றும் உறுப்பினர்கள், தாக்குதலில் தமது உறவுகளை பறிகொடுத்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.(மா)

Previous article97 கிலோ மாட்டிறைச்சி அழிப்பு!
Next articleபதில் அமைச்சர்கள் மூவர் சத்தியப்பிரமாணம்! (காணொளி இணைப்பு)