இன்று நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தை அடுத்த, யாழ்ப்பாணம் வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆலய வழிபாட்டில் அனைவருக்கும் சமத்துவம் வேண்டும்! ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும்! ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, 28 நாட்களாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று மாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், ஆலய பரிபாலன சபைக்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக போராட்டத்தில் ஈடுபட்டுவந்த மக்கள் தெரிவித்தனர்.

ஆலய முன்றலில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில், தலைவராக மா.பாஸ்கரன், செயலாளராக பொ.மதியழகன், பொருளாளராக க.சுரேஸ்குமார், உப தலைவராக வே.சதீஸ்வரன், உப செயலாளராக வே.பானுசா, நிர்வாகக்குழு உறுப்பினர்களாக ந.வஜிகரன், ம.குணரத்தினம், பவானி, சிவஞானம், இ.இரத்தினசிங்கம், கு.சாரங்கன், மேரிஸ்ரலா, ஈஸ்வரநாதன், ஜெகதீஸ்வரன், நிசாந்தினி, ஜீவா, செ.வசிகரன், ற.திலகவதி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

கூட்டத்தில், பொது மக்கள், திருவிழா உபயகாரர்கள் ஆகியோருடன், பௌத்த இந்து பேரவை, சைவ மகா சபை போன்ற சமய அமைப்புக்கள், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு, கிராமிய உழைப்பாளர் சங்கம் ஆகிய சமூக மட்ட அமைப்புக்கள், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.(சி)

Previous articleகல்முனை போராட்டம் – வாக்குமுலம் பதிய உத்தரவு
Next articleநாளை ரிஷாட் மற்றும் இராணுவ தளபதி முன்னிலை!