தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுக் கொடுப்பதாக தெரிவித்து வாக்குகளை பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், மற்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் தமிழ் மக்களின் தமிழ் தேசிய உணர்வுகளை கரைத்து சிங்கள பேரினவாத கட்சிகளை நோக்கி தமிழ் மக்களை இழுத்துச் செல்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் மத்தியில் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தமிழ் மக்களின் மீட்பர்களாக காட்டி தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை அழித்து சிங்கள பேரினவாதத்திற்குள் கரைக்கின்ற வேளையை செய்கின்ற அதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்களின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜக்கிய தேசிய கட்சியினை மீட்பர்களாக காட்டி தமிழ் தேசியத்தின் அடையாளங்களை அழிக்கின்ற வேலையை செய்து வருகின்றனர்.

தமிழ் மக்கள் சலுகை அரசியலை நிராகரித்து தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தது தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாசைகளான வடக்கு,கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்கள் ஒரு தேசிய இனம், தமிழ் மக்களின் இறைமை பாதுகாக்கும் வகையில் சமஸ்டி முறையிலான ஆட்சியின் ஊடாக சிங்கள குடியேற்றம் மற்றும் பௌத்த மயமாக்கள் தடுக்கப்பட்டு தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய நிலை ஏற்படும் என தமிழ் மக்கள் நம்பி தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வாக்களித்த இருந்தனர்.

இந்நிலையில் தமிழ் மக்களின் அடிப்டைக் கோரிக்கைகள் அனைத்ததையும் பேரினவாத கட்சிகளிடம் அடகு வைத்து தமிழ் தேசிய உணர்வுகளை அழித்து கரைத்து செல்லுகின்ற நிலையில் தமிழ் மக்கள் இதனை அடையாளம் கண்டு தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை ஓரம் கட்டிவிடக்கூடாது என்பதற்காகவே மக்களுக்கான சமூர்த்திகளை பெற்றுக் கொடுப்பதும், கம்பெறலி திட்டத்தின் ஊடாக புனர்வாழ்வு, புனரமைப்பு பணிகளை முன்னெடுப்பதும் சில நூறு பேருக்கு அரச தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தும் வருகின்றார்கள். இதனை நாங்கள் பிழை என்று சொல்லவில்லை.

ஆனால் இதனுடாக தமிழ் மக்களை ஏமாற்றிக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு பேரினவாத கட்சிகளுடன் கைகோர்த்து தமிழ் தேசிய உணர்வுகளை கரைத்து வருவதாக தெரிவித்து இருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் உரிமைகளை முன்னெடுப்பதுடன் அபிவிருத்தினையும் முன்னெடுத்து இருக்குமானால் நாம் அதனை விமர்சித்து இருக்கமாட்டோம்.

ஆனால் புதிய அரசியல் யாப்பின் ஊடாக பௌத்த மதம் அரச மதமென்றும், வடக்கு கிழக்கு இணைப்பை கைவிட்டு இருக்கின்றார்கள், ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு இருக்கின்றார்கள் சமஸ்டியை கைவிட்டு இருக்கின்றார்கள் இந்நிலையில் தமிழ் இனத்திற்கான தனித்துவமான அடையாளங்களை கைவிட்டு சிங்கள மக்களின் அடிமைகளாக தமிழ் மக்கள் வாழக்கூடிய ஒற்றையாட்சியை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டு உள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை நம்பி வாக்களித்த தமிழ் மக்களை சிங்கள பேரினவாத்தின் அடிமைகளாக அடகு வைக்கும் நிலையையே தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மேற்கொண்டு வருவகின்ற இந்த நிலைமையையே நாம் விமர்சிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.(மா)

Previous article“ஜொலிபோய்ஸ் 2019” வெற்றி கிண்ணம்- தம்பட்டை லெவன் ஸ்டார் சம்பியன்
Next articleஉலகக் கிண்ணப் போட்டி:இலங்கை-மேற்கிந்தியத் தீவுகள் இன்று மோதல்!