தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.
தெரிவுக்குழுவில் சாட்சி வழங்க முன்னிலையாகாதவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றில் விளக்கமளிக்கவுள்ளதாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
சாட்சி வழங்குவதற்காக முன்னிலையாகுமாறு எந்தவொரு தரப்பிற்கும் விடுக்கப்படும் அறிவித்தல்களை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற தெரிவுக்குழு குறிப்பிட்டுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழு அழைப்பு விடுக்கும் தினத்தில் முன்னிலையாக முடியாதவர்கள், அதற்காக பிறிதொரு தினத்தை ஒதுக்கி கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாட்சி வழங்கல்கள் நிறைவடைந்தவுடன் இறுதி அறிக்கையை தயாரிக்கவுள்ளதாக பாராளுமன்ற தெரிவுக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் 10 ஆம் திகதி நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.
அன்றைய தினம் சாட்சி வழங்க முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கவுள்ளதாக உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை குறித்த தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அன்றைய தினம் அவர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. (நி)






