முல்லைத்தீவு கேப்பாபுலவு பிரம்படி வயல்வெளியில், நேற்று இரவு 9.00 மணியளவில், பாரிய குண்டு ஒன்று வெடித்துள்ளது.
அந்த வெடிச்சத்தம், அருகில் முள்ளிவாய்க்கல், புதுக்குடியிருப்பு, மாத்தளன், முல்லைத்தீவு, முள்ளியவளை, வற்றாப்பளை வரையான கிராமங்களில் உள்ள மக்களால் உணரப்பட்டுள்ளதுடன், மக்களின் வீடுகள் அதிர்ந்துள்ளன.
கேப்பாபுலவு படைத் தலைமையகத்திற்கு அருகில் இடம்பெற்ற சம்பவத்தினால், மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கேப்பாபுலவு பிரம்படி வயல் வெளியை, இந்திரம் மூலம் துப்பரவு செய்த தனியார் ஒருவர், கும்பைகளுக்கு நெருப்பு மூட்டிச் சென்றுள்ளார்.
இதன் போது, போரில் பயன்படுத்தப்பட்ட பாரிய குண்டு ஒன்று நெருப்பின் வெப்பத்தினால் வெடித்து சிதறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுமார் ஒரு மீற்றர் ஆழத்திற்கும், இரண்டும் மீற்றர் அகலத்திற்கும் குழி ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தை தொடர்ந்து, முள்ளியவளை பொலிசார் மற்றும் கோப்பாபுலவு படை முகாமை சேர்ந்த படையினர், சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன், தீயை அணைத்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட படை அதிகாரிகள் மற்றும் தடையவியல் பொலிஸார், வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஆராய்வுகளை மேற்கொண்டனர். (சி)








