கிளிநொச்சி – தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் மாதிரி கிராமம் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாசவால் திறந்து வைக்கப்பட்டது.
தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் ஆராதி நகர், சஞ்சீவி நகர் கிராமங்கள் இன்று அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவில் உள்ள தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்கு பகுதியில் குறித்த திட்டத்தின் கீழ் மாதிரி கிராமங்கள் இரண்டு அமைக்கப்பட்டு 32 பயனாளிகளிற்கான காணி உரிமங்கள் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் 32 பயனாளிகளிற்கு காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கிளிநொச்சிமாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு 50 ஆயிரம், ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் பெறுமதியான கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் கையளிக்கப்பட்டன.
அத்துடன் 7.5 இலட்சம் பெறுமதியான வீட்டு திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 150 பேருக்கு முதற்கட்ட காசோலைகளும் வழங்கிவைக்கப்பட்டன. (நி)