கிளிநொச்சியில் இலவச திறன் விருத்தி மையத்தால் 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் அனுசரணையுடன் லிட்டில் எய்ட் இலவச திறன் விருத்தி மையத்தில் கணிணி மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த 115 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் கிளிநொச்சி கல்வி பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தின் கேட்போர் கூடத்தில் கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தின் அதிபர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ் பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளாரும், யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளருமான த. சத்தியமூர்த்தி, கௌரவ விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலக உதவி திட்டப் பணிப்பாளர் அ.கேதீஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் மற்றும் லிட்டில் எய்ட் நிறுவன தலைவர், கிளிநொச்சி சின்மியா மிசன் சுவாமிகள், கருணா நிலைய பொறுப்பு பங்குதந்தை, அதிபர்கள், ஆசிரியர்கள், உட்பட மாணவர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது இலவசமாக திறன் விருத்தி கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், திறமைச் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

அடிப்படை கணிணி கற்கை நெறி மற்றும் கணிணி ஹாட்வெயார், தையல் பயிற்சி என்பன குறித்த அமைப்பினரால் கடந்த பத்து வருடங்களாக இலவசமாக பயிற்றப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சி திருநகரில் இயங்கி வருகின்ற கல்வி பண்பாட்டு அபிவிருத்தி நிலையத்தில் மீள்குடியேற்றத்திற்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட இலவச திறன் விருத்தி செயற்பாட்டில் இதுவரை ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் பயன்பெற்றுள்ளனர்.(சி)

Previous articleஅரசாங்ஙத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 10 மற்றும் 11 ஆம் திகதிகளில்
Next articleகோட்டபாயவை சிறையில் அடைத்தால் பேருதவி – கம்மன்பில