பாடசாலை பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து கிடைத்துள்ள முறைப்பாடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மாதம் 08ம் திகதி அவரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு நேற்று நோட்டீஸ் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
நேற்றையதினம் இந்த முறைப்பாடு பரிசீலிக்கப்பட்ட போது, கல்வி அமைச்சின் முன்னாள் பிரசுரங்கள் ஆணையாளர் நாயகம், தற்போதையை கல்வி வெளியீட்டு பணிப்பாளர் ஐ.எம்.கே.பி. இலங்கசிங்க சாட்சி வழங்கினார்.
மேலும் பாடப்புத்தகங்கள் அச்சிடும் போது, தனது உருவப்படம் மற்றும் தனது அறிக்கையை பதிக்குமாறு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தன்னை தனிப்பட்ட வகையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதாக ஐ.எம்.கே.பி. இலங்கசிங்க சாட்சியம் வழங்கினார்.
இவ்வாறு அச்சிடுவதற்கு 4 ரூபா மேலதிக செலவினம் ஏற்பட்டதாகவும், கடந்த சில வருடங்களில் சுமார் 04 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டமையும் தெரிய வந்துள்ளதாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.(சே)