தமிழ் மக்களின் நியயமான கோரிக்கைகள் தொடர்பில் சிந்திக்காது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி குற்றம் சுமத்தியுள்ளார்.

லண்டணில் இருந்து இன்று அனுப்பியுள்ள ஊடகச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கல்முனை பிரதேச செயலக விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

மிகவும் இலகுவான முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டிய கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயம், இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து இனங்களுக்கிடையேயான முறுகலை ஏற்படுத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டது.

இதற்கான முழுப் பொறுப்பையும் தமிழத் தேசியக் கூட்டமைப்பே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த மாகாண சபையில், 11 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தமிழத் தேசியக் கூட்டமைப்பு 6 உறுப்பினர்களை கொண்டிருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்த போது, தமிழ்த் தலைமைகள், அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையின் உண்மைத் தன்மையை தெளிவுபடுத்தி, பேரம் பேசி பிரதேச செயலகத்தின் தரத்தை உயர்த்தி இருக்கலாம்.

அல்லது நல்லிணக்க அரசில் எதிர்க்கட்சி பதவியைப் பெற்றுக் கொண்ட போதாவது, இது விடயமாக பேரம் பேசி இருக்கலாம்.

எதுவுமே செய்யாமல் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நியயமான கோரிக்கைகள் எதைப்பற்றியும் சிந்திக்காமல், பேரம் பேச வேண்டிய நேரத்தில் சோரம் போய்விட்டு, இப்போதும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழமையான கையாலாகாத தன்மையை தொடர்ந்தும் காட்டுகின்றது.

கல்முனைப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதால் இஸ்லாமிய மக்களுக்கோ, அவர்களது நிலத்திற்கோ எதுவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இந்த விடயத்தில், முஸ்லிம் தலைமைகள் பொறுப்புடனும், நிதானத்துடனும் செயற்பட்டு இவ்விடயத்திற்கு பூரண ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணி வினயமாகக் கேட்டுக் கொள்கின்றது.

சிறுபான்மை இனங்கள் நமக்குள் நாமே விட்டுக் கொடுப்பதற்கு முரண்டு பிடித்தால், எவ்வாறு பெரும்பான்மையிடம் நாம் அதிகார பரவலாக்கலை எதிர்பார்க்க முடியும்.

தமிழர் விடுதலைக் கூட்டணி அன்று தொட்டு இன்று வரை அனைத்து இன மக்களும் சமாதானத்துடனும் ஐக்கியமாகவும் வாழ வேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றது.
இதன் அடீப்படையில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணியும் கல்முனை மாநகர சபையில் ஆதரவு கொடுத்தது.

ஆனால் பிரதேச செயலகத்தில் அமைந்திருந்த விநாயகர் கோவில் விடயத்தில் எவருடனும் கலந்தாலோசிக்காமல் மாநகர முதல்வர் அவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து, இந்துக்களின் மனதை நோகடிக்கும் செயல் என்று தெரிந்திருந்தும், தொடர்ந்தும் இனவிரிசலுக்கான நிலைமையை ஏற்படுத்தினார். (சி)

Previous articleகிழக்கு மக்களுக்கு ஆதரவாக வடக்கில் கவனயீர்ப்பு!
Next articleகிளிநொச்சி சமுர்த்தி உத்தியோகத்தர்களிடம் தன்னிலை விளக்கம் கோரப்பட்டுள்ளது