அம்பாறை கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை, தரம் உயர்த்துவதற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்குபற்றிய, எதிரிகளின் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு, கல்முனை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

ஆதரவாக போராட்டம் நடத்தியவர்களும், கல்முனை நீதவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் நேரில் ஆஜரானார்கள். ஆதரவானவர்களை ஆதரித்து சட்டத்தரணி பாருக்குடன், சட்டத்தரணி தெய்வநாயகம் மதிவதனன் அஜரானார்.

ஏதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் சார்பில், சட்டத்தரணிகளான அன்சார் மௌலான, சரிப் காரியப்பர், ஐ.எம்.ரமீஸ், ரிப்கான் உட்பட முஸ்லிம் சட்டத்தரணிகள் பலரும் ஆஜரானார்கள்.

வழக்காளியான கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் சார்பில் பொலிஸ் சாஜன்ட் அப்துல்கையூப் ஆஜரானார்.
கல்முனை பொலிஸ் சிறு குற்றத்தடுப்பு பொலிஸாரினால், நீதவானுக்கு சம்பவங்கள் தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, போராட்டங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை 10.30 மணியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையிலே, எதிரிகள் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலங்களை பதிவு செய்ய வேண்டும் என, நீதவான் ஐ.என்.றிஸ்வான் உத்தரவிட்டதுடன், வழக்கை செப்டெம்பர் 2 ஆம் திகதியிட்டு கொடுத்தார்.

போராட்டத்தை நிபந்தனையற்ற அடிப்படையில் கைவிடப்பட்டுள்ளதால், மீண்டும் இப் போராட்டம் எந்நேரமும் நடக்கலாம் எனக் கருதி, பொலிஸார் கூடுதலான காலஅவகாசத்தை நீதிமன்றத்திடம் இருந்து கேட்டுப் பெற்றுக்கொண்டுள்ளனர். (சி)

Previous articleபலவீனமான அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்கின்றது – மஹிந்த
Next articleசிமிழ் கண்ணகை அம்மன் ஆலய சத்தியாக்கிரகப் போராட்டம் தற்காக இடைநிறுத்தம் !